என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சென்னை மெட்ரோ ரெயில்"
மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து அந்நிறுவன ஊழியர்கள் கோயம்பேடு அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தையடுத்து, மெட்ரோ நிறுவனம் இன்று ஊழியர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதனால் மெட்ரோ சேவை வழக்கம்போல் இயக்கப்படும் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சில இடங்களில் சிக்னல் கோளாறு காரணமாக சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஏர்போர்ட் வரை செல்லும் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வண்ணாரப்பேட்டை முதல் ஏர்போர்ட் வரையிலான மெட்ரோ ரெயில் சேவை வழக்கம்போல் இயக்கப்படுவதாக மெட்ரோ நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #ChennaiMetroRail
விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் பணியாளர்கள் கோயம்பேடு அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள், விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் இதனை கண்டித்து நேற்று மதியம் முதல் மெட்ரோ ரெயில் நிர்வாக அலுவலகத்தில் பணியை புறக்கணித்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரும் கைக்குழந்தைகளுடன் மெட்ரோ ரெயில் நிர்வாக அலுவலக நுழைவு வாயிலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர்.
பணி நேரம் முடிவடைந்ததும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் வெளியேற்றினர். பின்னர் அவர்கள், கையில் பதாகைகளுடன் நுழைவு வாயிலில் நின்று மெட்ரோ நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். இவர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகளால் 2 ஊழியர்கள் தாக்கப்பட்டதாக தகவல் பரவியதால் சக ஊழியர்கள் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “முதலில் 8 மணி நேரமாக இருந்த பணியை தற்போது 14 மணி நேரமாக மாற்றி விட்டனர். விடுமுறையும் கொடுப்பதில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகிறோம். தற்போது சங்கம் அமைத்ததால் 8 பேரை பணி நீக்கம் செய்துள்ளனர். நிரந்தர பணியாளர்களை நிறுத்திவிட்டு ஒப்பந்த முறையில் அனைத்து ஊழியர்களையும் நியமிக்கவே இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர்” என்றனர்.
இந்த செய்தி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் படிப்படியாக பரவியதால், மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடமுடிவு செய்தனர். இதனால் நேற்று இரவு மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் ஒழுங்கீனம், பணிநியமன விதிகளின் படி பணியாற்றாதது, விதிகளை மீறி செயல்பட்டது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டது, ஒழுங்கினமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டது போன்ற காரணங்களால் 8 பணியாளர்களிடம் இருந்து கடந்த டிசம்பர் மாதம் விளக்கம் கேட்கப்பட்டது.
இதில் 3 பேர் தொழில்நுட்ப துறையிலும், 2 பேர் நிலைய கட்டுப்பாட்டாளர்களாகவும், 2 பேர் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களாகவும், ஒருவர் இளநிலை பொறியாளர் (மின்சார துறை) ஆகவும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் அளித்த விளக்கம் திருப்தி இல்லாததால், மறுபடியும் 2 விசாரணை அலுவலர் நியமிக்கப்பட்டு அவரிடம் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. அந்த விளக்கமும் திருப்தி அளிக்கவில்லை என்று விசாரணை அலுவலர் கூறி உள்ளார்.
கடந்த 26-ந்தேதி 8 பணியாளர்களையும் அவர்கள் பணியாற்றும் துறை இயக்குனர் பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட 8 பணியாளர்களும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் முறையிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை யாரும் முறையிடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சங்கத்தின் தலைவரும், சி.ஐ.டி.யூ. தமிழ் மாநிலக்குழு தலைவருமான அ.சவுந்தரராஜன் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளம், அலவன்ஸ், மகப்பேறு விடுமுறையை குறைத்தார்கள். அரை சம்பள விடுமுறை ரத்து செய்யப்பட்டது. ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது பற்றி தொழிலாளர் துறையில் முறையிட்டும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் சரியான பதில் சொல்லாததால் தொழிற்சங்கம் அமைத்தார்கள். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பொய் புகார் கொடுத்து சங்க நிர்வாகிகள் 8 பேரை பணி நீக்கம் செய்தார்கள்.
பணியாளர்கள் சந்திக்க முயன்றும் அதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் மறுத்துவிட்டதால் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். தொழிலாளர் நலத்துறை நாளை (இன்று) காலை 10 மணிக்கு தொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது. தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெறும் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, நியாயம் கிடைத்தால் போராட்டம் வாபஸ் பெறப்படும். இல்லை என்றால் தொழிலாளர்களின் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வந்தன. சென்னையில் 45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரெயில் அமைக்கும் திட்டத்தில் 35 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பணிகளை முடித்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தற்போது வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். புதிய வழித்தடத்திலும் ரெயில்கள் இயங்க இருப்பதால் கட்டணத்தை சற்று குறைக்க அதிகாரிகள் மத்தியில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அதிகாரப்பூர்வ பட்டியல் நேற்று இரவு வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விமான நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் ரூ.10, நங்கநல்லூர் ரோடு ரூ.20, ஆலந்தூர் ரூ.30, கிண்டி, சின்னமலை சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை ரூ.40, டி.எம்.எஸ். ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்னை சென்டிரல் ரூ.50, ஐகோர்ட்டு, மண்ணடி வண்ணாரப்பேட்டை ரூ.60, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் ரூ.40, கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு ரூ.50, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர் ரூ.60 என கட்டணம் வசூலிக்கப்படும்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து விமானநிலையம் ரூ.50, மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை ரூ.40, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம் ரூ.40, சென்னை சென்டிரல் ரூ.40, ஐகோர்ட்டு, மண்ணடி வண்ணாரப்பேட்டை ரூ.50, ஈக்காட்டுதாங்கல் ரூ.40, அசோக்நகர் ரூ.30, வடபழனி ரூ.20, அரும்பாக்கம் ரூ.10, கோயம்பேடு ரூ.10, திருமங்கலம், அண்ணாநகர் டவர் ரூ.20, அண்ணாநகர் கிழக்கு ரூ.30, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர், பரங்கிமலை ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எழும்பூரில் இருந்து விமானநிலையம் ரூ.50, மீனம்பாக்கம் ரூ.60, நங்கநல்லூர் ரோடு ரூ.50, ஆலந்தூர், கிண்டி ரூ.50, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., ரூ.40, ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., ரூ.30, அரசினர் தோட்டம் ரூ.20, சென்னை சென்டிரல் ரூ.10, ஐகோர்ட்டு, மண்ணடி ரூ.20, வண்ணாரப்பேட்டை ரூ.30, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர் ரூ.50, வடபழனி ரூ.40, அரும்பாக்கம் ரூ.40, கோயம்பேடு, திருமங்கலம் ரூ.40, அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு ரூ.30, ஷெனாய் நகர் ரூ.20, பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் ரூ.10, பரங்கிமலை ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.
சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து விமானநிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர் ரூ.50, கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை ரூ.40, டி.எம்.எஸ்., ரூ.30, ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., ரூ.20, அரசினர் தோட்டம் ரூ.10, ஐகோர்ட்டு ரூ.10, மண்ணடி, வண்ணாரப்பேட்டை ரூ.20, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் ரூ.50, கோயம்பேடு பஸ் நிலையம் ரூ.40, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு ரூ.40, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி ரூ.30, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ரூ.20, எழும்பூர் 10, பரங்கிமலை ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Metrotrain
சென்னை:
ஷெனாய் நகர் மெட்ரோ ரெயில் நிலையம், திரு.வி.க. நகர் பூங்கா அருகே, பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கும் பணி 8 வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. இதனால் திரு.வி.க. நகர் பூங்கா உருமாறியது. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது ஷெனாய்நகர் மெட்ரோ ரெயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஷெனாய் நகர் ரெயில் நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய வணிக வளாகம் 2 அடுக்கு கொண்ட கட்டிடமாக பூமிக்கு அடியில் உருவாகிறது. இது ரூ.175 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
திரு.வி.க. நகர் பூங்காவுக்கு கீழே இந்த வளாகம் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாகிறது. முதல் தளத்தில் கார்கள், வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்படுகிறது. இதில் 416 கார்களையும், 856 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம். அடுத்த தளத்தில் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யும் வணிக வளாகம் அமைக்கப்படுகிறது.
இதைதொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் சார்பில் ஷெனாய்நகர் திரு.வி.க. நகர் பூங்கா புதுப்பிக்கப்படுகிறது. இந்த பூங்கா பிரமாண்ட மாக உருவாகிறது.
பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் இது உருவாகிறது.
எழில்மிகு நீரூற்றும் அமைக்கப்படுகிறது. கூழாங் கற்களிலான நடைபாதை, குழந்தைகள் விளையாடுவதற்குரிய வசதிகள், டென்னிஸ் கிரவுண்ட், நடை பயிற்சி பாதை ஆகியவை இந்த பூங்காவில் அமைக்கப்படுகின்றன.
இவை தவிர நிழல் தரும் மரங்கள், மலர் செடிகள் வைக்கப்படுகின்றன. பொது மக்கள் அமர்ந்த ஒய்வு எடுக்கவும், இயற்கை எழிலை ரசிக்கவும் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.
பொழுது போக்கு அம்சங்களும் இந்த பூங்காவில் இடம் பெறுகின்றன. திறந்த வெளி தியேட்டர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பூங்கா புதுவடிவம் பெற்றால் ஷெனாய்நகர் பகுதி மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு பூங்கா வாகவும், குழந்தைகள் மகிழ்வுடன் விளையாடும் இடமாகவும் இருக்கும். #Metrotrain
சென்னை நகரில் துரித போக்குவரத்துக்காக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் ஒரு வழித்தடத்தில் சென்ட்ரலில் இருந்து எழும்பூர், கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக மீனம் பாக்கத்துக்கும், மற்றொரு வழித்தடத்தில் மீனம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூர், சைதாப்பேட்டை, டி.எம்.எஸ். வரையிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் டி.எம்.எஸ். - சென்ட்ரல் இணைக்கப்பட்டதும் இந்த திட்டம் நிறைவு பெறும்.
இதன் மூலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் காத்திருக்கும் போதும் அல்லது பயணம் செய்யும் போதும் தங்களது ஆன்ட் ராய்டு செல்போனில் ‘வை-பை’ இணைப்பு மூலம் ‘செயலி’யை பதிவிறக்கம் செய்து சினிமா படங்கள், பாடல்கள், டி.வி.நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் பார்த்து கொண்டே பயணம் செய்யலாம்.
இதற்காக தனியாக ‘செயலி’யை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்ல 45 நிமிடம் ஆகிறது. இந்த நேரத்தில் இந்த செயலி மூலம் எச்.டி. தரத்துடன் கூடிய போழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்று மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #metrotrain #Chennai
சென்னை:
சென்னை மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ பயணிகள் சேவை தற்போது நடந்து வருகிறது.
பயணிகள், பொது மக்கள் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு சிறப்பு வசதிகளை மெட்ரோரெயில் நிர்வாகம் உருவாக்கிஉள்ளது.
வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், ஆலந்தூர் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகளுக்காக சிறப்பு புகைப்பட கண்காட்சி, ஓவிய கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்காக பல்வேறு விளையாட்டு முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சமூக, பாரம்பரியங்கள் குறித்த புகைப்பட, ஓவிய காட்சிகள் பயணிகளை பெரிதும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் தொடங்கி வைத்தார். மெட்ரோ ரெயில் நிலையங்களில் இதனை பொது மக்கள், பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை:
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு முதல் மெட்ரொ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. அதன் பின் விமான நிலையம்- சின்னமலை, ஆலந்தூர்- பரங்கிமலை, கோயம்பேடு- நேரு பூங்கா, நேருபூங்கா- சென்ட்ரல், சின்னமலை- ஏ.ஜி. டி.எம்.எஸ். ஆகிய வழித்தடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே அண்ணா சாலையில் உள்ள ஏ.ஜி. டி.எம்.எஸ்.சில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சுரங்க பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இப்பணி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இப்பணி நிறைவடைகிறது.
இதையடுத்து அண்ணாசாலை டி.எம்.எஸ்.- சென்ட்ரலுக்கு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் ஏதாவது குறைபாடு இருந்தால் அவை நிவர்த்தி செய்யப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயிலை வருகிற டிசம்பர் மாதம் பயணிகளின் பயன்பாட்டுக்கு இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
டி.எம்.எஸ்.-சென்ட்ரல் இடையே சுரங்க பாதையில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஆகிய 3 ரெயில் நிலையங்கள் அமைகிறது.
தற்போது சென்னையில் மெட்ரோ ரெயில் முதல் வழித்தடத்தில் 35 கிலோ மீட்டருக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 26 ரெயில் நிலையங்கள் உள்ளன.
டெல்லியில் உள்ள ‘ஸ்கோச் குரூப்’ என்கிற அமைப்பு, மாநில மற்றும் தேசிய அளவில் சுகாதாரம், கல்வி, ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு, நிதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் சிறந்த சேவையை அளிக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் ‘ஸ்கோச் ஆர்டர் ஆப் மெரிட்’ என்கிற பெயரில் தங்கப்பதக்கம் வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ‘ஸ்கோச் ஆர்டர் ஆப் மெரிட்’ தங்கப்பதக்கம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. முதலாவது கட்டப்பணிகள் மூலம் பயணிகளுக்கு தரமான சேவை அளிப்பதுடன், ரெயில் நிலையங்களையும் தரமான முறையில் அமைத்து செயல்படுத்தி வருவதை கவுரவிக்கும் வகையில் இந்த தங்கப்பதக்கத்தை வழங்குவதாக ஸ்கோச் குரூப் அமைப்பு தெரிவித்தது.
அந்த அமைப்பின் தலைவர் சமீர் கோச்சார், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளிடம் தங்கப்பதக்கத்தை வழங்கினார்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, ‘மிகச் சிறந்த மற்றும் செயல்திறன் மிக்க செயல்திட்டங்கள் மற்றும் சேவைகள் வழங்கி வருவதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு இந்த உயரிய தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது’ என்றனர்.
சென்னை:
சென்னை நேரு பூங்கா முதல் விமான நிலையம் வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல்- நேரு பூங்கா இடையேயும், சைதாப்பேட்டை ஏஜி டி.எம்.எஸ். இடையேயும் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து கடந்த 25-ந்தேதி முதல் இன்றுவரை மெட்ரோ ரெயிலில் பயணிகள் இலவசமாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இலவச பயணம் தொடர்பாக முதல் நாளில் நிறைய பேருக்கு தெரியாது என்பதால் அன்று பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. நேற்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சென்னை பயணிகளும், வெளியூரில் இருந்து வந்தவர்களும் குடும்பம் குடும்பமாக வந்து மெட்ரோ ரெயிலில் ஏறி பயணம் செய்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் மெட்ரோ ரெயில் பெட்டிக்குள் அங்கு மிங்கும் நடந்து சென்று குதூகலித்தனர்.
இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மெட்ரோ ரெயிலுக்குள் பயணித்த படியே செல்பி எடுத்துக் கொண்டனர். பயணிகள் கூட்டம் அலை மோதினாலும் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் பொறுமையாக காத்து நின்று அதில் ஏறி பயணித்தனர். சுற்றுலா செல்வது போல அவர்கள் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் ஏறிச் சென்று மீண்டும் அந்த இடத்துக்கே வந்து இறங்கினார்கள். கோடை விடுமுறை காரணமாக மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பயணித்தனர்.
முதல் நாளில் 50 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்தனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. இன்று காலை 10 மணிவரை 30 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். அதாவது 3 நாளில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.
இன்றுநேரம் செல்ல செல்ல பயணிகளின் வருகை அதிகரித்தது. இன்று ஒரே நாளில் மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 1½ லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ட்ரல் முதல் விமான நிலையம்வரையும், ஏ.ஜி. டி.எம்.எஸ். முதல் விமான நிலையம் வரையும் இலவசமாக செல்லலாம் என்பதால் பயணிகள் முழு உற்சாகத்துடன் பயணத்தை மேற்கொண்டனர். #Metrotrain
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்